தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமி நந்தினி தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டதன் காரணமாக கடந்த வியாழன் அன்று மண்ணடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவரின் சிகிச்சையில் சிறுமியின் வயிற்றில் புண்கள் இருப்பதும் அல்சர் பிரச்சனை இருந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று இரவு சிறுமி நல்ல நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் இருந்தவர்கள், இன்று வீடு திரும்பி விடலாம் எனக் கூறியுள்ளனர்.
ஆனால், இன்று காலை சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபொழுது முறையான காரணத்தைக் கூறாததால் பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மருத்துவமனையில் சிறுமிக்கு நேற்று இரவு ஒரு ஊசி போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துவிட்டார் என்று சொல்லி பெற்றோர் முறையிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தனர். முறையான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது என்று விசாரணையில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பெற்றோர் கூறுகையில், “அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லாம குழந்தைய எடுத்துட்டு போய்ட்டாங்க சார். உங்களால முடியலனா சொல்லுங்க, வேற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போறோம்னு நேத்து கூட கேட்டோம். நேத்து நைட் கூட பாப்பா சரியாகிடும்னு சொன்னாங்க. இன்னிக்கு காலைல ரத்தம் கம்மியா இருக்கறதால குழந்தை இறந்துடுச்சுனு சொல்றாங்க. குழந்தைய எடுத்துட்டு போய்ட்டாங்க.” எனக் கூறினர்.