சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வுக்கு முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமையக கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்வின்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் அளித்த புகார்களின் அடிப்படையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையகத்தில் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.