Skip to main content

பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சிலை திறப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Singer T.M. Inauguration of Soundararajan Statue Eulogy of Chief Minister M.K.Stalin

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி மதுரை முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டி.எம். சௌந்தரராஜன் முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலை அருகே அமைந்துள்ள சுற்று வேலிகளில் இசைக் கருவிகளின் படங்கள் இடம் பெற்றுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

 

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ் சினிமாவை தனது காந்தக் குரலால் கட்டிப் போட்டு, நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.எம். சௌந்தரராஜன் அவர்களது சிலையை மதுரையில் திறந்து வைத்தேன். 24 வயதில் பாடத் துவங்கி, 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேல் திரைப் பாடல்கள், 2500 பக்திப் பாடல்களைப் பாடிய அவர், பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பக்திப் பாடல்கள் இன்றுவரை தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி வெளிவட்டச் சாலைப் பகுதிக்கு ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ எனப் பெயர் சூட்டினோம். ‘திரை இசை, மக்கள் இசை யாரும் அடையாத உயரத்தைப் பெற்றவர் டி.எம்.எஸ். 1950 ஆம் ஆண்டு மந்திரிகுமாரி காலத்தில் இருந்து எனக்கு நண்பர். நடிகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றிப் பாடும் வித்தைக்காரர்’ எனக் கலைஞரால் பாராட்டப்பட்டவர்.

 

Singer T.M. Inauguration of Soundararajan Statue Eulogy of Chief Minister M.K.Stalin

 

கலைஞரின் வரிகளில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ் பாடியிருந்தார். காலத்தால் அழியாத பாடல்கள் பல பாடிய அவர் என்றென்றும் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்