பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (74) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கினர்.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. எஸ்.பி.பி. மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். எஸ்.பி.பி.யின் மறைவு தமிழ் திரைப்படத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த எஸ்.பி.பி. மறைவு எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எஸ்.பி.பி.யை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.