72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதையுடன் மறைந்த பாடகர் எஸ்.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்ததலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு எஸ்.பி.பி.யின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், பாடகர் மனோ நேரில் இறுதியஞ்சலி செலுத்தினர். அப்போது, எஸ்.பி.பி. உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார் பாடகர் மனோ. அதேபோல் எஸ்.பி.பி. உடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் இறுதியஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் இறுதிச்சடங்குகளைச் செய்தார். அதன்பிறகு எஸ்.பி.பி.க்கு சொந்தமான பண்ணை நிலத்திற்கு அவரது உடல் எடுத்து வரப்பட்டது.
அப்போது நடிகர் விஜய், எஸ்.பி.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி. சரணுக்கு ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.க்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். 24 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எஸ்.பி.பி.க்கு மரியாதை செலுத்தினர். அதையடுத்து, எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.