சிலம்பொலி செல்லப்பனாரின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.9.2023) நாமக்கல் மாவட்டம் சிலம்பொலியார் நகரில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பி. ராமலிங்கம், பொன்னுசாமி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், பிஜிபி குழுமத்தின் தலைவர் பழனி ஜி. பெரியசாமி, புலவர் தமிழமுதன், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இராசேந்திரன், தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை தலைவர் கொங்குவேள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன் எனப் பாராட்டப்பட்டு, 'சிலம்பொலி' செல்லப்பன் எனச் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் புகழப்பட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிலையையும் அறிவகத்தையும் திறந்து வைத்தேன். பேரறிஞர் அண்ணாவாலும் முத்தமிழறிஞர் கலைஞராலும் போற்றப்பட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள், தமது 90 ஆவது அகவையிலும் குடிமக்கள் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியை ஆற்றினார். தாம் பெற்ற பட்டத்துக்கு நீதி செய்த தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனாரின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.