விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது அண்ணமங்கலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, இவருக்கு சந்திரா வாசுகி என்ற இரு மனைவிகள். ஏழுமலையின் முதல் மனைவி சந்திரா இறந்துவிட்டார். முதல் மனைவி சந்திராவுக்கு ராமதாஸ் உமா மகேஸ்வரி என்ற ஒரு மகன், மகள் உள்ளனர். இரண்டாவது மனைவி வாசுகிக்கு கலைச்செல்வன் கலைமணி ஆகிய இரு மகன்கள் உள்ளனர் ஏழுமலைக்குசொந்தமாக சுமார் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இதில் 10 ஏக்கர் நிலத்தை கலைச்செல்வனும் இரண்டு ஏக்கர் நிலத்தை முதல் மனைவி சந்திராவின் மகன் ராமதாஸ் அனுபவித்து வந்தனர் இரண்டு பேருமே சென்னையில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான அண்ணமங்கலத்திற்கு வந்து குடும்பத்துடன் தங்கி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கலைச்செல்வன் தனது வீட்டருகே பாத்ரூம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்துள்ளார் இது சம்பந்தமாக அண்ணன் தம்பி இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வன் பாத்ரூம் கட்ட ஏற்பாடு செய்துள்ள அந்த இடத்தில் தமக்கும் பங்கு உள்ளது எனக் கூறியுள்ளார் ராமதாஸ். இதனால் ராமதாஸுக்கும், கலைச்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராமதாஸ் மற்றும் அவரது மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து கலைச்செல்வனை ஈட்டி மற்றும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் கலைச்செல்வன் இறந்து போனார் இதையடுத்து கலைச்செல்வன் மனைவி காயத்ரி வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அடிப்படையில் போலீசார் ராமதாஸ் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராமதாஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சூரியபிரகாஷ் தலைமறைவாகியுள்ளார் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணன்-தம்பி இடப்பிரச்சனையில் நடந்துள்ளது இந்த கொலை. கிராமப்புறங்களில் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும் இதுபோன்ற நிலப்பிரச்சனை இடப்பிரச்சனை வருவது சகஜமான ஒன்றுதான், அப்படிப்பட்டவர்கள் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அழைத்து பேசி அவர்கள் மூலம் தீர்வு கண்டிருக்கலாம் அல்லது வருவாய்த்துறை மூலம் அந்த இடத்தை அளந்து முறையாக யாருக்கு எவ்வளவு என்பதை அடையாளப்படுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு ஒரு தந்தைக்கு பிறந்த இரு மகன்கள் கொஞ்ச இடத்திற்காக சண்டையிட்டு அது கொலையில் போய் முடிந்துள்ளது வேதனை அளிக்கிறது என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.