நாகை மாவட்ட இளம்பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கிய காவல்துறை உதவி ஆய்வாளர், பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியிருக்கும் எஸ்.ஐ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள வில்லியநல்லூரை சேர்ந்த இளம்பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனம் ஒன்றில் பனிபுரிந்துவருகிறார். இவருக்கும் தலைஞாயிறு ஓரடியாம்பலத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் என்பவருக்கும் 2018 ம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டு. பிறகு காதலாக மாறி அதையும்தாண்டவே, கவிதா கர்ப்பமானார்.
இந்த செய்தி இரு வீட்டாருக்கும் தெரியவர, கர்ப்பவிவகாரத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள பல வழிகளை தேடிய விவேக் ரவிராஜ் , கவிதாவிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வோம் அதனால் கருவை கலைத்து விடு, இது வெளியில் தெரிந்தால் எனக்கு அசிங்கமாகிடும் என ஆரம்பத்தில் கெஞ்சியிருக்கிறார், பிறகு வற்புறுத்தி அடித்து துன்புறுத்தி மிரட்டியிருக்கிறார். கர்பத்தை கலைக்க அமைச்சர் ஒருவருக்கு வேண்டிய உள்ளூர் அதிமுக பிரமுகர்களையும் அனுப்பி மிரட்ட செய்தார்.
ஒருவழியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்யவைத்திருக்கிறார். அதன்பிறகு கவிதாவிடம் பேசுவதை சப்-இன்ஸ்பெக்டர் தவிர்த்து கண்டபடி திட்டி அசிங்கப்படுத்த, சந்தேகம் அடைந்த கவிதா தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் இறக்கமில்லாத விவேக் ரவிராஜ் இதை வெளியில் கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று புதைத்து விடுவேன், இனிமேல் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
விவேக்ரவிராஜின் அதிரடி மிரட்டலால் மனமுடைந்த இளம்பெண் கவிதா தகுந்த ஆதாரங்களுடன் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி வேண்டும் என கோரி நாகை டி.எஸ்.பி., எஸ்.பி., டி.ஐ.ஜி. ஆகியோரிடம் புகார் அளித்தும் பலனின்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய எஸ்.ஐ. மீதும், அவரது தாயார் மீதும் ஏழு பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட அதிரடியாக நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த விவேக்ரவிராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ஐஜி ரூபேஷ்குமார்மீனா.
இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் நிச்சயம் கைது செய்துவிடுவார்கள் என்பதை அறிந்த சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் தற்போது தலைமறைவாகிவிட்டார்.