சட்டவிரோத மதுவிற்பனை விவகாரத்தில் எஸ்.ஐ தற்கொலை செய்துகொள்ள முயன்றது சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு அருகே உள்ளது சாலைக்கிராமம். இந்த பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் இருந்து பேருந்து நிலையத்திற்கு அருகே கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, இந்த பகுதியில் 24 மணிநேரமும் மது விற்பனை நடைபெறுவதாக சமுக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியானது. அதே சமயம், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தை கையில் எடுத்த சிவகங்கை டாஸ்மாக் மேலாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த இரண்டு டாஸ்மாக் பார்களையும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த பார்களில் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதை உறுதி செய்த அதிகாரிகள், அந்த டாஸ்மார்க் பார்களுக்கு சீல் வைத்து உத்தரவிட்டனர். டாஸ்மாக் அதிகாரிகளின் இச்செயல் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜான் பிரிட்டோ. இவர் சாலைக்கிராமத்தில் நடந்த சட்டவிரோத மது விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் எஸ்.ஐ ஜான் பிரிட்டோ மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்பி, அவரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜான் பிரிட்டோ, காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலர்கள், அவரை மீட்டு சாலைக்கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் இளையான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.