Skip to main content

“டாக்டர் டீ குடிக்கக் கூடாதா...” - இ.எஸ்.ஐ. அவலம்!

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Shouldn't you drink Dr. Tea? -ESI

 

சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்கு வசதியில்லாத அந்தப் பெண் வீட்டில், “நீ வேலை பார்க்கும் நிறுவனத்தில் உன் சம்பளத்திலிருந்து இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்கிறார்களே? தீராத தலைவலிக்கு அங்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கூற, அந்தப் பெண்ணோ “இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் வருகிறார்களோ இல்லையோ? விடுமுறை நாளோ? ஒன்றும் தெரியவில்லையே?” என்றிருக்கிறார். அந்த வீட்டில் நம்மைத் தொடர்பு கொண்டு இதுகுறித்துப் பேச, வலைத்தளத்தில் விபரம் தெரிந்துகொண்டு “இன்று மதியம் 1 மணி வரை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேலை நேரம்” எனக் கூறினோம்.

 

அந்தப் பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக் கிளம்பியபோது நம்மையும் அழைக்க, உடன் சென்றோம். நாம் சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குச் சென்றபோது பகல் மணி 11.30. அங்கிருந்த தகவல் பலகையில் வெளிநோயாளிகள் பார்க்கும் நேரம் 8 மணி முதல் 12 மணி வரை எனப் போட்டிருந்தனர். ஆனால், எந்தப் பிரிவிலும் மருத்துவர் ஒருவர்கூட இல்லை. செவிலியர் ஒருவரிடம்  ‘டாக்டர் எங்கே?’ எனக் கேட்டோம்.  “இப்போதுதான் ஓ.பி. பார்த்துட்டு கிளம்பினார்.” என்றார்.  ‘யாரிடம் புகார் தெரிவிப்பது?’ என்று கேட்டபோது,  ‘புகார் எழுதுறதுன்னா.. ஒரு தாளில் எழுதி.. அங்கிருக்கும் புகார் பெட்டியில் போட்டுவிட்டுக் கிளம்புங்க..” என்று புகார் பெட்டி இருக்கும் இடத்தைக் கைகாட்டிவிட்டு, “டாக்டர் டீ குடிக்கப் போயிருக்கிறார். வெயிட் பண்ணுங்க. போன் பண்ணி வரச் சொல்லுறேன்.” என்றார்  கூலாக.  

 

Shouldn't you drink Dr. Tea? -ESI

 

நாம் இ.எஸ்.ஐ. மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக்கை தொடர்புகொண்டு இது குறித்துப் பேசினோம்.  “இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைங்கிறதுனால ஓபில நோயாளிங்க எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்திருக்கும். யாராச்சும் ஒரு டியூட்டி டாக்டர் இருப்பாரே? டிஸ்பென்சரில கூட்டம் இருக்கும். ஆஸ்பத்திரிக்கு நோயாளிங்க ரொம்ப பேரு வரமாட்டாங்க. டாக்டர் அங்கேதான் இருப்பாரு. அங்கிட்டு எங்கேயாச்சும் போயி யாருகிட்டயாவது பேசிட்டு இருப்பாரு. நான் டாக்டரை வரச் சொல்லுறேன்.” என்று சமாளித்தார்.

 

esi hospitel

 

அடுத்த சில நிமிடங்களில் டாக்டர் பாரத்குமார் பரபரப்புடன் வந்து வெளி நோயாளிகள் பிரிவில் அமர்ந்தார்.  நாம் அவரிடம் பேசியபோது, “இன்னைக்கு காலைல 8 மணில இருந்து 11.06 மணி வரைக்கும் 40 நோயாளிங்களை நான் ஒரு டாக்டர் இருந்து பார்த்திருக்கேன். எல்லா நோயாளிகளையும் பார்த்துட்டுத்தான் போனேன்.  அதுக்குள்ள சூப்பிரண்டுகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருக்கீங்க. அவரு ரெண்டு தடவை போன் பண்ணிட்டாரு. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைலகூட பார்க்க முடியாத சர்ஜரிய நான் பண்ணிருக்கேன். அந்த நல்ல விஷயத்தை எல்லாம் பத்திரிகைல எழுதமாட்டீங்க. டாக்டர் டீ குடிக்கக் கூடாதா? டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள?” என்று டென்ஷனானார்.  

 

டாக்டரோ, சாமானியரோ,  டீ குடிப்பதற்கு முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஆகுமா என்பதுதான் கேள்வி! எத்தனை திறமையாகப் பணியாற்றினாலும் வேலை நேரத்தில் தனது இருக்கையில் டாக்டர் ஏன் இல்லை என்பதுதான் நோயாளிகளின் ஆதங்கம்!

 

 

சார்ந்த செய்திகள்