அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன் விற்ற மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவமும், தொடர்ந்து நேற்று முன்தினம் (09.12.2021) அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த முதியவர், பெண் மற்றும் சிறுமி ஆகியோரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவமும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், நேற்று ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து நடத்துநர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் நகரப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவரிடம் பேருந்தின் நடத்துநர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரியவர, இதுதொடர்பாக அந்த மாணவி கானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரவில் விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் கூட்டம் இல்லாததைப் பயன்படுத்தி நடத்துநர் பாலியல் தொல்லை தந்துள்ளது தெரியவந்துள்ளது. கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அரசுப் பேருந்து நடத்துநர் சிலம்பரசன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவங்களைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் காலங்களில் பணியாளர்கள் இம்மாதிரியான சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.