ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் தனியாருக்குச் சொந்தமான மடம் உள்ளது. இந்த மடத்தில் நகராட்சி தொழில் அனுமதி பெற்று பூஜை பொருட்கள், பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் மடத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வற்புறுத்தியது. ஆனால் முறையாக அனுமதி பெற்று பட்டா இடத்தில் கடை நடத்தி வருவதாகவும், ஆவணங்களைக் காண்பித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேவஸ்தான நிர்வாகத்திடம் கடையை காலி செய்ய எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாத நிலையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தியதால் கோபமடைந்த கடை உரிமையாளர் வசந்த் என்பவர் திடீரென கடைக்கு மேலே ஏறி நின்று கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் தீக்குளிக்க முயன்றவரைத் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து கடைக்காரர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள், போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்றம் சென்று இடத்தின் உரிமையாளர் தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த் துறையினர் அறிவுறுத்தினர். தொடர்ந்து கடைகளைப் பூட்டி வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். கடையை காலி செய்யத் தேவஸ்தான நிர்வாகம் வற்புறுத்தியதால் கடைக்காரர் தீக்குளிக்கும் முயன்ற சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் கடை வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் வியாபாரிகள் மத்தியில் தேவஸ்தானத்தின் மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது.