அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்து வருகின்றனர்.
அதேபோல் கள்ளச்சாராய விற்பனை தொடர்புடைய நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. செங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து வருவதாகவும் ஆனால் காவல்துறை தரப்பினர் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் தவிர்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை பாக்கெட்டுகள் அடைத்து விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் அங்கு வருவோர் அதை வாங்கி அருந்தி செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.