திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நூற்றுக்கு அதிகமான கோவில்கள் மற்றும் சில குளங்கள் உள்ளன. இதில் பல கோவில்கள் தனியார் வசம் உள்ளன. சில கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் வசம் உள்ளன. கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்கள், குளங்களைப் பராமரிப்பதாகக் கூறி இந்து அமைப்பினர் மற்றும் தனியார் ட்ரஸ்டிகள் அனுமதி பெற்றன. கோவில் புனரமைப்பு என்கிற பெயரில் லட்சங்களில் நன்கொடை வாங்கி கோவில் புனரமைத்தனர். இதுகுறித்த கணக்குகள் எதுவும் வெளிப்படையானதாக இல்லை. அதோடு பராமரிப்பு என்கிற பெயரில் கிரிவலப் பாதையில் உள்ள கோவில்களை, அஷ்ட லிங்கங்களைப் பராமரித்தனர். காலப்போக்கில் இங்கு அதிகளவு வருமானம் வருவதோடு இதனை வைத்து தனியாக வசூல் வேட்டை நடத்தினர். இதனைப் பக்தர்கள் எதிர்த்ததால் இந்து சமய அறநிலையத்துறை தங்கள் வசம் கோவிலை எடுத்துக்கொண்டது.
திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமம் அருகே கிரிவலப் பாதையில் அக்னி தீர்த்தம் என்கிற குளம் உள்ளது. சிதிலமடைந்திருந்த அந்த குளத்தை சீரமைக்கிறோம் என சிதம்பர சோனாசல சுவாமிகள் என்பவர் அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று அதனை நன்கொடைகள் மூலமாக புனரமைத்தார். குளத்தை புனரமைப்பு செய்து சீரமைத்தவர் குளக்கரையில் சிறிய நந்தி மற்றும் சிவன் சந்நதியை உருவாக்கி பூஜைகள் செய்யத் துவங்கினார்.
வார இறுதி நாட்கள், பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களில் அதிகளவு இங்கு பக்தர்கள் கூட்டம் வந்துகொண்டிருந்தது. இதன் வருமானமும் அறநிலையத்துறை கணக்குக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார்கள் தரப்பு, கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை காவல்துறை உதவியுடன் கோவிலை அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி தங்களது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
இதுபோல் கிரிவலப் பாதையில் பல கோவில்கள் தனியார் வசம் உள்ளன. அங்கெல்லாம் உண்டியல் வைத்து பக்தர்களிடம் வசூல் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி தனியார் கோவில்களில் உண்டியல் வைத்தாலே அதனை அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்கிறது. அதன்படி பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தும் தனியார் கோவில்களைக் கையகப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கிரிவலப் பாதையில் உள்ள கோவில்களில் சிசிடிவி கேமரா அமைத்து உண்டியலில் பணம் போடச் சொல்லாமல் அர்ச்சனை தட்டில் பணம் போடச் சொல்லும் சிவாச்சாரியார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அண்ணாமலையார் பக்தர்கள் வைக்கின்றனர்.