தமிழகத்திலேயே சிறிய ஒன்றியம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜம்னாமத்தூர் ஒன்றியம். இந்த ஒன்றியத்தின் மொத்த கவுன்சிலர்களின் எண்ணிக்கை 7. நடந்து முடிந்த தேர்தலில் 3 இடங்களில் அதிமுகவும், ஒருயிடத்தில் தேமுதிகவும், திமுக 2 இடத்திலும், சுயேட்சை ஒருயிடத்தில் வெற்றி பெற்றனர்.
அனைவரும் கவுன்சிலராக பதவியேற்றுக்கொண்ட பின் அதிமுக சின்னத்தில் வெற்றிபெற்ற காளி என்கிற கவுன்சிலர் துணை சேர்மன் பதவி வேண்டும்மென முரண்டு பிடித்தார். இதனை திமுக பயன்படுத்திக்கொண்டு அவருக்கு வலை வீசியது. இதனால் பதவியேற்பின்போது அடிதடியாகி, கவுன்சிலர் காளி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த ஜீவாமூர்த்தி என்கிற கவுன்சிலர் சேர்மனாக வெற்றி பெற்றுள்ளார். அதேநேரத்தில் திமுகவை சேர்ந்த மகேஸ்வரி என்கிற கவுன்சிலர் துணை சேர்மனாக வெற்றிபெற்றுள்ளார்.
அதிமுக கவுன்சிலர்கள் மெஜாரிட்டியாக உள்ள ஒன்றியத்தில் அதிமுக சேர்மன் பதவியில் வெற்றிபெற்ற நிலையில், திமுக கவுன்சிலர் துணை சேர்மனாக வெற்றிபெற்றது அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்தது.
இதுப்பற்றி திமுக தரப்பில் விசாரித்தபோது, அதிமுகவை சேர்ந்த ஜம்னாமத்தூர் ஒ.செ வெள்ளையன் தனது மகள் ஜீவாவை சேர்மனாக்க முடிவு செய்தார். துணை சேர்மனாக கேசவன் என்பவரை உட்காரவைக்க முடிவு செய்தார். எனக்கு அப்பதவி வேண்டும்மென காளி முயன்றது தான் சிக்கலானது.
நாங்கள் சேர்மன் பதவியை கைப்பற்ற முயற்சி செய்தோம். அப்போது அதிமுக ஒ.செ வெள்ளையன், எங்களுக்கு தூதுவிட்டார். என் மகள் சேர்மன், நீங்கள் சொல்லும் நபர் துணை சேர்மன் என்றார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். தேர்தல் மூலம் அதிமுகவை சேர்ந்த ஜீவா சேர்மனாகிவிட்டார். எங்கள் கட்சி கவுன்சிலர் மகேஸ்வரி துணை சேர்மனாகிவிட்டார் எனச்சொல்லி சிரித்தார்கள்.