கடந்த வாரம் நக்கீரன் அலுவலகத்தை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், " நான் காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு கிராமத்தில் இருந்து பேசுகிறேன். இங்குள்ள சாமியார் சண்முகம் என்பவன் என்னோட குழந்தை உள்பட மூன்று குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கான். என்னோட குழந்தை என்கிட்ட சொன்னதும் நான் அதிர்ச்சி ஆயிட்டேன். ஊர்ல உள்ளவங்ககிட்ட சொன்னா போலீஸ்ல புகார் கொடுத்தா நீங்க குடும்பத்தோட இங்க வாழ முடியாதுனு மிரட்டுராங்க. இதுக்கு நக்கீரன் தான் குற்றவாளி சாமியார் முகத்திரையை கிழிக்கணும்’’என்றார்.
உடனே கூடுவாஞ்சேரி வழியாக காயரம்பேடு விரைந்தோம். கங்காநகரில் வசிக்கும் பாதிக்கப்பட்ட குழந்தையின் அம்மா ஸ்ரீதேவி கண்ணீருடன் நம்மிடம் நடந்ததை சொல்ல, அதை வீடியோவில் பதிவு செய்துக்கொண்டோம். " நாங்கள் சைதாபேட்டையில் இருந்தோம். காயரம்பேட்டில் கடந்த இரண்டு வருடத்துக்கு முன் சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டிட்டு வருகிறோம். இங்கயே பக்கத்துல வாடகை வீட்ல இருக்கோம். நான் என் கணவர் சுகாஷ் மற்றும் என்னோட பதினோரு வயது குழந்தையோட அளவான குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். இங்க பக்கத்துல பழங்காலத்து காசியம்மன் கோயில் இருக்கு. சாமி கும்பிட அங்கதான் போவோம். அங்க சண்முகம் என்ற சாமியாரும் அவருக்கு துணையா அவர் மகன் பூபதியும் தங்கி பூஜை செய்து வராங்க.
இந்தநிலையில ஜூலை 1ஆம் தேதி பாப்பாவுக்கு பிறந்தநாள். எல்லாருக்கும் சாக்லைட் கொடுத்த கையோட அவளோட விளையாடும் எதிர் வீட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த நாலு பேரும் சாமியாருக்கு சாக்லெட் கொடுக்க போனபோது, ஒரு பாப்பா மட்டும் கோயில் உள்ளே போகல. மற்ற மூன்று பேரும் உள்ளே போனப்ப சாமியார் ஒரு பாப்பா கிட்ட தப்பா நடக்க, கையை தட்டிவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்துள்ளாள்.
என் குழந்தையும் எதிர்வீட்டு பாப்பாவிடமும் தகாத முறையில் சாமியார் நடந்துக்கொண்டதை வீட்டுக்கு வந்ததும் என்னிடம் சொல்ல (வார்த்தைகளால் சொல்ல முடியாத காமகொடூரனின் லீலையை அழுதபடியே நம்மிடம் அந்த தாய் ஒரு பிஞ்சிக்கு நடந்த கொடூரத்தை நம்மிடம் விளக்கினார் ) "நான் அதிர்ந்து போனேன். உடனே எதிர்வீட்டு பாப்பா வீட்டுக்கு போயி நடந்ததை கூறினேன். ஆனால் அங்கு நடந்ததே வேறு... சிறிது நேரத்தில் இந்த ஊரை சேர்ந்த அரசியல் பிரமுகருடன் சேர்ந்து சிலர் என் வீட்டுக்கு வந்து ஏதோ நடந்து விட்டது. பெருசா ஒன்னும் நடக்கல. இதை இப்படியே விடாம பெருசுசாக்கினா ஊர்ல வாழ முடியாது என்று மிரட்டல் தான் தொடர்ந்தது...!
ஒரு வாரமாக என் குழந்தைக்கு நடந்த கொடுமைக்கு பற்றியே சிந்தனையாக இருந்தது. நிம்மதியே இல்லை..., தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்காமல் என் எதிரே நடமாடுவதை பொருத்துக்கொள்ள முடியாமல் தான் ,நீதி கிடைக்க வேண்டும் என நக்கீரனுக்கு போன் செய்தேன் என்றார். மேலும் புகார் கொடுக்க என் கணவரும் விரும்பவில்லை என்றும் புகார் கொடுத்தால் ஊருக்கு நாம் புதிது. நான் வேலைக்கு சென்றுவிட்டால் வீட்டில் இருவர் மட்டும் தனியாக இருக்கும் போது ஏற்கனவே ஊர்ககாரன் அரசியல்வாதி எதாவது உங்களை செய்துவிட்டால் நான் மட்டும் என்ன செய்வேன் என்று தடுத்து விட்டார் என்றவுடன், குழந்தையின் அப்பா சுகாஷ்க்கு போன் செய்து பேசினோம்.
யாருக்கும் பயப்பட வேண்டாம். அரசும் சட்டமும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு கடுமையான தண்டனை உள்ளது. மேலும் உங்களை மிரட்டும் அரசியல் புள்ளி மீதும் சட்டம் பாயும் என்றவுடன் அவரே புகார் கொடுக்க முன்வந்து கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் சிவக்குமாரிடம் புகார் கொடுத்தார் . மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆன மதியழகனுக்கும் தகவல் தெரிவித்தோம். அவர்களும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சண்முகம் போல பல காம சாமியார்கள் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதே போல் அவர்களை காப்பாற்றி பணம் பார்க்கும் அரசியல்வாதிகளின் மகளுக்கோ, பேத்திக்கோ இது போல நடந்தால் சும்மா இருப்பார்களா என்கிறார்கள் பொது மக்கள்.