காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இதயத்தை கிழிப்பதாக உள்ளன. இத்தகைய கொடுமைகள் உலகில் யாருக்கும் நிகழக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது முகநூல் பதிவில் கூறியதாவது,
8 வயது குழந்தையான அசிஃபா கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வழக்கம்போல குதிரைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றாள். அன்றிரவு குதிரைகள் வீடு திரும்பின, ஆனால், ஆசிஃபா வீட்டுக்கு வரவில்லை. அவரது பெற்றோர்களும், உறவினர்களும் தேடினார்கள். ஆனால், பயனில்லை. ஜனவரி 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் புஜ்வாலா புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகாரை வாங்கிய காவல் அதிகாரி,‘‘உனது மகள் யாருடனாவது ஓடியிருப்பாள் (அந்த குழந்தைக்கு 8 வயது தான்)’’ என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்.
சிறுமியை கண்டுபிடிக்க விசாரிப்பது போல காவல்துறையினர் நடித்தாலும், உண்மையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின் ஜனவரி 17-ஆம் தேதி அங்குள்ள புதரில் சீரழித்துக் கொல்லப்பட்ட நிலையில் அசிஃபாவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அசிஃபாவின் பெற்றோர் அங்கு சிறிதளவு நிலம் வாங்கியிருந்தனர். அங்கு அசிஃபாவின் உடலை புதைக்க முயன்றபோது, அப்பகுதியிலுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த சிலர் ஆசிஃபா உடலை அங்கு புதைக்கக்கூடாது என்று கூறி விரட்டியடித்தனர். அதனால் அசிஃபாவின் உடலை அடுத்த ஊருக்கு எடுத்துச் சென்று பெற்றோர் புதைத்தனர். அதன்பின் சில காலம் அங்கு வசித்த பெற்றோர், உயிருக்கு பயந்து அண்மையில் வேறு ஊருக்கு சென்று விட்டனர்.
ஆசிஃபாவுக்கு நடந்த கொடுமை மனிதாபிமானம் கொண்டவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. ஜனவரி 10-ஆம் தேதி ஆசிஃபாவை அவளது நண்பன் ஒருவன் மூலம் சிலர் பிடித்து கடத்தினர். பின்னர் அங்குள்ள கோவிலுக்கு கொண்டு சென்ற அவர்கள் 8 நாட்கள் கோவிலில் வைத்திருந்து, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை படுகொலை செய்து அங்குள்ள புதரில் வீசியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள். இவர்கள் ஆசிஃபாவின் குடும்பத்திற்கு உதவுவது போல நடித்தனர் என்பது தான் இன்னும் கொடுமையான விஷயம்.
இதில் கொடுமை என்னவென்றால் ஆசிஃபாவைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தியது தான். இப்போதும் ஆசிஃபா குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தரப் போராடும் வழக்கறிஞர் தீபிகாவுக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டிலும், இந்த அளவுக்கு கொடூரமாக இல்லாவிட்டாலும், மனிதத்தன்மைக்கு ஒவ்வாத வகையில் பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 6 வயது ஹாசினி, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவி புனிதா, திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்த 4 வயது குழந்தை மகாலட்சுமி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியில் தன்ராஜ் என்ற கொடியவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சரஸ்வதி என்ற எட்டாம் வகுப்பு மாணவி அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். இந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட எவரும் இன்று வரை தண்டிக்கப்படவில்லை என்பது சோகம்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது. இத்தகையக் குற்றங்களுக்கு காரணமாக குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
இவர்கள் மீதான குற்றச்சாற்றுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால் அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.