பல மாதங்களாக சாலையில் கொட்டிவைத்த
கற்களை ஏலம் விடும் போராட்டம்
மேற்பனைக்காடு கிராமத்தில் சாலை சீரமைக்க பல மாதங்களுக்கு முன்பு கொட்டி வைத்த கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கற்களை ஏலம் விடும் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் வழியாக பட்டத்தூரணி வரை செல்லும் சாலையை சீரமைக்க பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் பல மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு ஜல்லி கற்கல் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டது. பல மாதங்களாக சாலை பணி செய்யாததால் சாலை ஓரம் கொட்டப்பட்ட கற்கல் சாலையில் பரவி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. அதனால் அப்பகுதி பாதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் மேற்பனைக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம பொதுமக்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்கல் ஏலம் விடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் 30 ந் தேதி புதன் கிழமை ஜல்லி ஏலம் விடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தராஜன் தலைமையில் மாவட்ட நிர்வாக குழு ராசேந்திரன் ஏலத்தை தொடங்கி வைப்பதாகவும் ஒன்றிய துணைச் செயலாளர் கோபி ஏலம் கோருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டம் நடக்க இருந்த இடத்திற்கு வந்த அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கீரமங்கலம் போலிசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் எதிர் வரும் செப்டம்பர் 5 ந் தேதிக்கும் சாலை பணிகள் தொடங்கி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர் உத்தரவாதம் கொடுத்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
5 ந் தேதிக்குள் சாலை பணி தொடங்கவில்லை என்றால் 6 ந் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் கூறினார்கள்.
- பகத்சிங்