Skip to main content

சுங்கச் சாவடியில் ஏழு அரசு விரைவு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Seven government express buses denied entry at  TollGate

 

தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களின் தன்மையைப் பொறுத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே டோல்கேட்களில் வாகனங்களின் நெரிசலைக் குறைக்கும் வகையில் சலுகை கட்டணம் அடிப்படையில் மொத்தமாக சுங்கக் கட்டணம் செலுத்தப்படுகிற ‘பாஸ் டேக்’ கட்டண முறையையும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்தி அதுவும் நடைமுறையிலிருந்து வருகிறது. இதன்படி பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அரசு நிறுவன பஸ்களும் சென்று வருகின்றன.

 

இந்தச்சூழலில் சென்னையிலிருந்து நெல்லை, குமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் செல்லக்கூடிய 7 அரசு விரைவு பேருந்துகள் காலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பக்கம் உள்ள சாலைப்புதூர் டோல்கேட்டைக் கடக்க முயன்றபோது, அவைகளின் பாஸ்டேக் அக்கவுண்ட்டில் பணம் இல்லாதது தெரியவர, அந்த 7 விரைவு பஸ்களையும் அனுமதிக்க மறுத்து ஊழியர்கள் ஓரம் கட்டிவிட்டனர். அரசு நிர்வாகத்திலிருந்து முறையான தகவல் வராததால் 5 மணி நேரமாக அந்த பஸ்களின் பயணிகள் அவஸ்தைப்படவே பின்னால் வந்த அரசு பேருந்துகளில் அந்தப் பயணிகள் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

டோல்கேட்டில் அவ்வப்போது கடந்து செல்ல ஒரு பேருந்தின் கட்டணம் 710 ரூபாய். அதுவே பாஸ்டேக் முறையில் கட்டப்பட்டால் ரூ.315 மட்டுமே. இதையடுத்து 5 மணி நேரத்திற்குப் பின்பு கட்டணத்தை நேரிடையாகச் செலுத்துங்கள் என்று அரசு உயரதிகாரிகளிடமிருந்து தகவல் வர, விரைவு பஸ் ஊழியர்கள் ரொக்கமாகச் செலுத்திய பிறகே 7 பஸ்களும் அனுமதிக்கப்பட்டன.


அரசு நிர்வாகம் பாஸ்டேக் பணம் இருப்பு முறையை, முறையாகக் கவனிக்காததின் விளைவே இந்த அவஸ்தை என்கிறார்கள் அதில் பயணித்த பயணிகள். அதேவேளையில், பாஸ்டேக் சர்வரில் ஏற்பட்ட பிரச்சினைதான் கணக்கில் பணம் இல்லாமல் காட்டியதற்கு காரணம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்