Skip to main content

தொடரும் கைது; அடுத்தடுத்து சிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Sethpattu taluk revenue officer arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் தாலுகா செய்யானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் வரதராஜ். இவர் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார். இவருடைய அண்ணன் முறை உறவினரும், எதிர் வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே ஊரைச் சார்ந்த சௌபாக்கியம் என்பவரிடம் இடம் வாங்கி கிரயம் செய்துள்ளார். அந்த இடம் உட்பிரிவுகள் செய்யாமல் கூட்டு பட்டாவாக வைக்கப்பட்டுள்ளது. தான் இடம் வாங்கி உள்ளதாகவும் அதனால் பட்டாவை உட்பிரிவு செய்து தனது பெயருக்கு மாற்றி தருமாறு 2023ல் மனு செய்துள்ளார். முறையான காரணமில்லாமல் இவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இதுப்பற்றி தன் தம்பி சகாதேவனிடம் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி சேத்பட் தாலுகா அலுவலகம் வந்து சர்வேயர் தீனதயாளன் அவர்களைச் சந்தித்தார். அப்போது, நீங்கள் இடம் கிரயம் பெற்றால் மட்டும் போதுமா?  நீங்கள் ஏன் என்னை வந்து சந்திக்கவில்லை என்று கேட்டவர், அந்த இடம் மூன்று பட்டாவுக்கு பெயர் மாற்ற ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் மூன்று பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இவர்கள் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சொன்னவுடன் ரூபாய் 10,000 தர வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதற்கு அவர்கள் ரூபாய் 5000 வேண்டும் என்றால் முன்பணம் தருகிறோம், பின்பு பட்டா பெயர் மாற்றம் செய்த பிறகு தருகிறோம் என்று வந்து விட்டார்கள்.

இது சம்பந்தமாக ஹரி கிருஷ்ணனுடைய தம்பி சகாதேவன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திருவண்ணாமலை விஜிலென்ஸ் அலுவலகம் வந்து டி.எஸ்.பி வேல்முருகனிடம் புகாரை கொடுக்க, அவரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பிப்ரவரி 22 ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணி அளவில் தாலுக்கா அலுவலகத்தில் வைத்து, சகாதேவன் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது, தன்னுடைய அலுவலகத்திலேயே வைத்து பணத்தை பெற்றுக் கொண்டார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பணத்தோடு அவரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் இதேபோல் போளூரில் வருவாய்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ட்ராப் செய்து ஒரு அலுவலரை லஞ்சப்பணத்தோடு கைது செய்தனர். இந்த மாதம் சேத்துப்பட்டில் சர்வே அலுவலகத்தில் ட்ராப் செய்து சர்வேயரை கைது செய்துள்ளனர்.

லஞ்சம் வாங்கி வருவாய்த்துறையினர் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும் இவர்கள் மாறாமல் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். இந்த லஞ்ச கைதுகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சார்ந்த செய்திகள்