வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை மற்றும் நரசிங்கபுரம் ஊராட்சிகளில் ஆலங்காயம் ஒன்றிய திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் தந்த மனுக்களை பெற்று விரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் குறைகள் தீர்க்கப்படும் என்றார்.
பின்னர் அங்கு வந்திருந்த மக்களிடம் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும். ஆண்டுக்கு நூறு நாள் வேலை என்கிற 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு 365 நாட்கள் வேலை வழங்கப்படும். அதேபோல் நாள் ஒன்றுக்கு ரூ.250 ஊதியமாக வழங்கப்படும்.
தற்போது தமிழகத்தில் உள்ள 12500 ஊராட்சியிலும் தேர்தல் நடத்தாமல் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் உள்ளாட்சித் தேர்தலை மூன்று மாதத்திற்குள் நடத்த முயற்சி செய்து, மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றார்.