நாங்குநேரி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டிற்குப் பின்பு அ.திமு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாகிவிட்டனர்.
அ.தி.மு.க வேட்பாளரான நாராயணன் பாளை ஒன்றியம் சீவலப்பேரி துர்க்கையம்மன் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு தனது பிரச்சாரத்தைத் தெடங்கினார். இதை தலைமையேற்றுத் தொடங்கி வைத்தவர் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி. இதனையடுத்து வாக்கு சேகரிப்பின் போது பேசிய அதிமுக வேட்பாளர், நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தால், இரவு பகல் உழைப்பேன். ஜாதி மதம் பார்க்காமல் பழகி வருகிறேன். அடுத்த ஒன்றரையாண்டு உங்களுக்கு பணியாற்ற எனக்கொரு வாய்ப்புத் தாருங்கள் என்று பேசினார்.
அதே சமயம் காங்கிரசின் வேட்பாளரான ரூபி மனோகரன் அரியகுளத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் ஊராட்சிக்குட்பட்ட பாக்கியநாதபுரம், ரெங்க சமுத்திரம், பருத்திப்பாடு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். சில இடங்களில் மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு நடந்தே சென்று சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர், தொகுதியில் அலுவலகம் அமைத்து மக்கள் குறைகளைத் தீர்ப்பேன் அனைத்துப் பகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பேன். வசந்தகுமார் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அது போன்று மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு வருவதில் தீவிரமாக ஈடுபாடுவேன் என்றார். பிரச்சாரத்தின் போது கூட்டணியான தி.மு.க.வின் ஆவுடையப்பன் எம்.பி, ஞானதிரவியம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவக்குமார் உடனிருந்தனர்.