திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஸ்ரீ தேவிமங்கலத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்செல்வன்( வயது 23). வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படித்து முடித்துவிட்டு தற்போது ஊர் திரும்பியிருந்தார். இந்நிலையில் உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ஓரணியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் 35 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் அங்கு விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக போலீசாரிடம் தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் ராமச்சந்திரன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 18 பவுன் நகை, 7 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. சிறுகனூர் பகுதியில் தொடர்ந்து திருட்டு நடந்து வருகிறது. நான்கு மாதத்திக்கு முன்பு 133 பவுன் நகை கொள்ளை, 210 ஆடுகள் திருட்டு, தற்பொழுது ஒரே நாளில் இரு வீட்டில் திருட்டு என தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்துவருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சிறுகனூர் காவல்துறையினர் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.