கரோனா வைரஸ் தொற்று அடிக்கடி உருமாற்றம் அடைந்து அதன் பாதிப்பை கூடுதலாக்கி வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, உட்பட 23 -க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமுறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொற்று விரைவாக பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்க கூடிய தன்மை கொண்டது எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளாக ஊழியர்களை களப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்திலும் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமை படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தனி வார்டு ஒன்றில் 10 படுக்கைகள் ஒமைக்ரான் தொற்றுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பெருந்துறை மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 10 படுக்கைகள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்காக தனியாக ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா கட்டுக்குள் இருப்பதாகவும், தற்போது பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70 கரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை கரோனா பாதித்த நபர் அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.