தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (09.10.2023) காலை தொடங்க உள்ளது. இன்று கூடும் சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பைப் பேரவைத் தலைவர் அப்பாவு வாசிக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இதையடுத்து வினா - விடை நேரம் நடைபெற உள்ளது. அதன்பின்னர் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
காவிரி நீர் பகிர்வு விவகாரம் மீண்டும் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், கர்நாடகாவில் காவிரியில் நீர் திறப்பதற்கு எதிராகவும், தமிழகத்தில் நீர் திறப்பை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். மத்திய அரசை ஒரு மனதாக வலியுறுத்தும் இந்தத் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வர உள்ளார். தீர்மானத்தின் போது அனைத்துக் கட்சி சார்பில் அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர். சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே அனைத்துக் கட்சி ஆதரவுடன் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.