தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (09.10.2023) காலை 10 மணிக்கு கூடியது. தொடர்ந்து கேள்வி, பதில் விவாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரையை தமிழக முதல்வர் தொடங்கினார். அவரது உரையில், ''செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடகா மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை. இது தொடர்பாக நாம் எடுத்த முயற்சிகளை இந்த மாமன்றத்தில் விரிவாகச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி உரிமையைக் காப்பதில் திமுக உறுதியுடன் இருக்கும்'' என கூறிய முதல்வர், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி படி உரிய நீரை மத்திய அரசு தலையிட்டு நீரைப் பெற்றுத்தர வேண்டும் என தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதனைத் தொடர்ந்து தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்பொழுது காவிரி விவகாரத்தில் அரசு நிறைவேற்றும் தனித்தீர்மானத்தில் உள்ள சில வரிகளுக்கு பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பதைத் தெரிவியுங்கள் என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள் 'முதல்வர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானம் முழுமையான தீர்வை நோக்கியது அல்ல' என எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.