
உலகமே கரோனா தொற்றினால் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் கரோனாவையும் மீறி, அரசியல் சூடுபறந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இரண்டு பேருக்கும் அடுத்தடுத்து கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தினகரன் அணிக்கு சென்று தற்போது திமுகவில் இணைந்து கரூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பவர் செந்தில்பாலாஜி.
மேலும் ஜெயலலிதா, அப்பல்லோவில் சிகிச்சையில் இருக்கும் போது நலம்பெற வேண்டி பிரமாண்டமான வேண்டுதல் பிரத்தனை செய்து தமிழகம் முழுவதும் கவனத்தை திசை திருப்பியவர் செந்தில்பாலாஜி.
தற்போத செந்தில்பாலாஜி கரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு திருச்சி அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருவதால் அவருடைய ஆதரவாளர்கள் கரூர் மாவட்டம் முழுவதும் பல கோவில்களில் படையெடுத்து வருகிறார்கள்.

கரூர் திமுக மாணவரனி துணை அமைப்பாளர் வாசு, தாந்தோன்றிமலையில் கல்யாணவெங்கட்ரமண கோவிலுக்கு முடி காணிக்கை செலுத்தி வழிபாட்டை நடத்தினர். கரூர் நரசிம்ம பெருமாள் கோவிலில் குத்து விளக்கு ஏற்றி சிறப்பு பிராத்தனை செய்தனர். வயக்காட்டு ஶ்ரீமஹா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். செந்தில்பாலாஜி நலம் பெறுவதற்காக கரூர் மாவட்டத்தின் பெரும்பாலன இடங்கள் தற்போது பிரார்த்தனை மையங்களாக மாறி வருகிறது.