இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கரையைக் கடந்த 'நிவர்' புயல் தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவான பிறகு நவம்பர் 30- ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிசம்பர் 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 3- ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்.
புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வடமேற்கு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" என்றார்.
வங்கக்கடலில் 'நிவர்' புயல் உருவாகி கரையைக் கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது குறிப்பிடத்தக்கது.