அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுத்தவரை அவரது ரத்த நாளங்களில் மூன்று பிரதான ரத்த நாளங்களில் மூன்று வகையான அடைப்புகள் இருந்தன. ஓமந்தூரார் மருத்துவமனையில் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது.
அங்கு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு 5 முதல் 6 நாட்கள் கழித்து தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும். நாளை காலை அந்த அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இருக்கிறது. தொடர்ச்சியாக மருத்துவமனை நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளோம். நாளை காலை தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்கள்” எனக் கூறினார்.