Skip to main content

உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி

Published on 27/09/2024 | Edited on 27/09/2024
Senthil Balaji met Udayanidhi

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைக்கு பிறகு உச்சநீதிமன்றம் கொடுத்த நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்துள்ளார்.

வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும்; சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது; எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும்; 25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி ''என் மீது அன்பும் நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்த கழகத்தினுடைய தலைவர், தமிழக முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தினுடைய இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கும் இந்தநேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்காகும். இந்த பொய் வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொண்டு இந்த வழக்கில் இருந்து மீண்டு வருவேன். தமிழக முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியை பணிவன்போடு சமர்ப்பிக்கின்றேன்'' என தெரிவித்திருந்தார்.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் நிபந்தனைப்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார். இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் 'பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக,செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!' என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்