Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை தொடங்கியது

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

senthil balaji case issue 3rd judge investication

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

அதேநேரம் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்றக் காவலில் இருக்கும் நாட்களாகக் கருத முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

 

இதையடுத்து இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராக உள்ளார்” எனக் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளது” எனக் குறிப்பிட்டு “அதற்கு சனிக்கிழமை விசாரிக்கலாமே” எனக் கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கை எப்பொது விசாரிக்கலாம் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்பட உள்ள நிலையில் இன்று மீன்டும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை முன்வைக்கையில், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவல் காலமாகக் கருத முடியாது” என்று வாதிட்டு வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்