பரமத்தி வேலூர் அருகே கணவரை மனைவி சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்தன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர், ப.வேலூர் பேருந்து நிலையம் எதிரில் தேநீர் கடையில் சரக்கு மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கலா (36). விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்தும் வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி, வழக்கம்போல் விஜயகுமார் மது போதையில் வீட்டுக்குச் சென்றார். அப்போது தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கலா, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து விஜயகுமாரின் தலையில் பலமாகத் தாக்கியிருக்கிறார். அதில் பலத்த காயம் அடைந்த அவர் கத்திக் கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஜயகுமாரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த பரமத்தி வேலூர் காவல்நிலைய காவல்துறையினர், பின்னர் கொலை வழக்காக மாற்றினர். கணவரை அடித்துக் கொன்றதாக கலாவை கைது செய்தனர். கைதான கலா, “குடி போதையில் வரும் கணவனால் என் நிம்மதியும், வாழ்க்கையும் போச்சு. தினமும் அவரால் மன உளைச்சல் ஏற்பட்டது. சம்பவத்தன்றும் அவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுத்தியலால் தலையில் தாக்கிக் கொன்னுட்டேன்” என்று வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.