குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தாகக் கூறி, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பெண் கவுன்சிலர்கள் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் 16- வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பூங்கொடி வெங்கடேசன். இவரும், 1- வது வார்டு கவுன்சிலர் ரேவதி திருமூர்த்தி, 17- வது வார்டு கவுன்சிலர் நந்தினிதேவி ராஜகணேஷ் ஆகியோரும் குமாரபாளையம் காவல்நிலையத்தில் மார்ச் 30- ஆம் தேதி தனித்தனியாக ஒரு புகார் மனு அளித்தனர்.
புகார் மனுக்களில் கூறியுள்ளதாவது, "குமாரபாளையம் நகராட்சித் தேர்தலில் நாங்கள் மூன்று பேரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றோம். இந்நிலையில் மார்ச் 4- ஆம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இந்த பதவிக்கு தி.மு.க. சார்பில் கவுன்சிலர் சத்தியசீலன் போட்டியிட்டார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, குமாரபாளையம் அ.தி.மு.க. இளைஞரணி நகரச் செயலாளர் பாலசுப்ரமணியன், அவைத்தலைவர் பழனிசாமி, 22- வது வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன், ஜெயலலிதா பேரவை நகர பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் சத்தியசீலனுக்கு வாக்களிக்கும்படி எங்களை கட்டாயப்படுத்தினர்.
அதற்கு நாங்கள், அ.தி.மு.க. உறுப்பினராக இருந்து கொண்டு எதற்கு தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க வேண்டும்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், நாங்கள் சொன்னதைச் செய்ய வேண்டும்; எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது என்று மிரட்டினர்.
இந்நிலையில், 31- வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் விஜய்கண்ணன், மறைமுகத் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றார். அவர் தலைவராக வெற்றி பெற்றதற்கு நாங்கள்தான் காரணம் என்று கூறி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, பாலசுப்ரமணி உள்ளிட்டோர் எங்கள் மீது ஆத்திரம் அடைந்து, எங்களை கட்சியை விட்டு நீக்கினர்.
கடந்த புதன்கிழமை (மார்ச் 30ம் தேதி) காலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், பழனிசாமி, புருஷோத்தமன், ரவி, பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் 20- க்கும் மேற்பட்டோர் எங்கள் மூன்று பேரின் வீட்டிற்குள் நுழைந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறிய பிறகும், அதை எதிர்த்து நீ விஜய்கண்ணனுக்கு ஓட்டு போட்டிருக்கிறாய். எங்களால்தான் நீ குமாரபாளையத்தில் செல்வாக்கு பெற்றாய்.
இனி குமாரபாளையத்தில் உன் செல்வாக்கை சீர்குலைத்து, உன் தொழிலை நாசமாக்கி விடுவோம். இனி நீ நிம்மதியாக வாழ முடியாது. ஏன்டா இவர்களை பகைத்துக் கொண்டோம் என்று நீயும் உன் குடும்பத்தினரும் அழப்போகிறீர்கள் என்றும் மிரட்டினர். ஆபாச வார்த்தைகளாலும் திட்டினர்.
இதனால் என் குடும்பத்தார் உயிருக்கு பயந்து கொண்டு சத்தம் போட அ.தி.மு.க.வினரும், உடன் வந்த அடியாள்களும் சத்தம் போட்டால் உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமில்லை என்று மிரட்டினர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், 'எங்களை பகைத்துக் கொண்ட உங்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள்,' என்று மிரட்டி விட்டு கிளம்பிச்சென்று விட்டனர்.
அவர்களால் எங்களுக்கு உயிர் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு பெண் கவுன்சிலர்கள் புகார் மனுக்களில் தெரிவித்துள்ளனர்.
காவல்நிலையத்தில், புகார் மனுக்களை கொடுக்கும்போது பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். இந்த புகார் மனுக்கள் பெற்றுக் கொண்டதற்காக இன்னும் குமாரபாளையம் காவல்நிலையம் தரப்பில் சிஎஸ்ஆர் ரசீது கூட வழங்கப்படவில்லை என்றனர் மனுதாரர்கள்.
இது தொடர்பாக குமாரபாளையம் காவல்நிலையம் தரப்பில் விசாரித்தபோது, ''பெண் கவுன்சிலர்கள் அளித்த புகார் மனுக்கள் மீது இன்னும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சம்பவ இடத்தில் அவர் இல்லை,'' என்றனர்.
சாமானியர்கள் மீது புகார் வந்தால் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து, மாவுக்கட்டு டெக்னிக் வரை போகும் காவல்துறையினர், பட்டப்பகலில் பெண் கவுன்சிலர்களை அடியாள்கள் கும்பலுடன் சென்று அ.தி.மு.க. நிர்வாகிகள் மிரட்டியுள்ள போதும், புகார் மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகார் மீது சிஎஸ்ஆர் ரசீது கூட கொடுக்காமல் காவல்துறையில் அலட்சியமாக நடந்து கொள்வதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.