விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தற்போது இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், 'ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ப.சேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதேபோல் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக திமுக சார்பில் யார் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பாக திமுக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.