சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையின் அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்தியன் வங்கி தங்க நகை மதிப்பீட்டாளர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து 13 மணி நேரச் சோதனைக்குப் பிறகு நேற்று இரவு 7:55 மணிக்கு பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 3.30 மணி வரை என சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார். அதே சமயம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜாராக சம்மன் கொடுத்துள்ளது. மேலும் பொன்முடியின் மகனும் எம்.பியுமான கௌதம சிகாமணியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை குறித்த விவரங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், “துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் விசாரணையை எதிர்கொள்ளுங்கள். மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும்” என அமைச்சர் பொன்முடியிடம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே,என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சி.வி.கணேசன், சேகர்பாபு, ரகுபதி மற்றும் சட்ட நிபுணர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் வருகை புரிந்தனர். அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு எதிர்க்கட்சிகளின் கூட்டணியைக் கண்டு அச்சப்பட்டு ஏதாவது ஒரு வகையில், திமுகவிற்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமலாக்கத்துறை இந்த சோதனையை செய்திருக்கிறது. இந்த வழக்கு 2012 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்டது, அப்போதே நீதிமன்றம் இதை பெரிதாக எடுக்கவில்லை. புலன் விசாரணையும் நடைபெறவில்லை.
இந்த வழக்கு குறித்த பதிவை அமைச்சர் பொன்முடி தன்னுடைய வேட்பு மனுவிலே தெரிவித்து இருக்கிறார்கள். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நேற்றைக்கு அமலாக்கத் துறையினர் திட்டமிட்டு செய்ததாகும். பாஜக தலைமையில் 36 கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்து இருக்கிறார்களே இதில் 37 வது பெரிய கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்து அவர்களை வைத்து கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் எண்ணத்திலேயே இதனை செய்கிறார்கள். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பார்த்து பாஜக எந்த அளவிற்கு அச்சப்படுகிறது என்பதை இது போன்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. அமைச்சர் பொன்முடி நன்றாக இருக்கிறார். அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து பொன்முடி சிறிதும் கவலைப்படவில்லை. மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அமலாக்கத்துறை முன்பு ஆஜராக தயாராக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.