நதிகளை இணைக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இரண்டு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலந்து கொண்ட விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர். இத்தகைய போராட்டத்திற்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, தமிழகத்தில் இருந்து சென்றவர்களால், தமிழகத்துக்கு அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளது.
மிகவும் மட்டரகமாக, மனுஷனே என்று சொல்ல முடியாத அளவுக்கு நடந்திருக்கிறார்கள். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அப்படி நடந்து கொள்ளவில்லை. போராடனும், போராட்டம் நடத்துவது சரிதான்.
தமிழகத்தில் தலைகுனிவை ஏற்படுத்தும் ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது. நாட்டின் தலைநகரில் தமிழர்களின் மானத்தை வாங்கும் வகையில் தமிழகத்தில் இருந்து சென்ற சில விவசாயிகளின் செயல் மன்னிக்க முடியாத குற்றம். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமிழர் என்ற உணர்வுடன் இதனை கண்டிக்க வேண்டும் என்றார்.