தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே, பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ஆம்ஸ்ட்ராங் தனிமையில் இருக்கும் பொழுது கோழைகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளார்கள். காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ராகுல் காந்தி சோனியா காந்தி காலை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி இடமும் பேசியுள்ளார்கள். உண்மையான குற்றவாளிகளை ஆராய வேண்டும்; கண்டுபிடிக்க வேண்டும். இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் சரி, ஏற்கெனவே சரண் அடைந்துள்ள கொலையாளிகள் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. பின் புலம் என்னவென்று ஆராய வேண்டும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய அரசியல் பின்புலம் இருந்தாலும் சரி சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் பேரியக்கத்தின் கோரிக்கை.
அவரின் உடலை அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். பௌத்தராக தன்னை அர்ப்பணித்துள்ளார் என்ன பூஜை செய்ய வேண்டுமோ அதற்கு அனுமதிக்க வேண்டும், பிறகு அவரின் குடும்பத்தினர், கட்சி உறுப்பினர்கள் கேட்கும் இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். விஜயகாந்தை எப்படி அவரின் தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்தார்களோ அதே போல் ஆம்ஸ்ட்ராங்கையும் அவர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இது அந்தக் கட்சியினரின் கோரிக்கையும் கூட காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையும் கூட” எனத் தெரிவித்துள்ளார்.