ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வ பெருந்தகை வருகை தந்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மாநில தலைவர் செல்வ பெருந்தகை, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஜனநாயகத்தின் மாண்பு ஆகியவற்றை மத்திய அரசு சிதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சி தான் புதிய கல்விக் கொள்கையின் பி.எம் ஸ்ரீ திட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது. இத்திட்டத்தை ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 60% நிதியை வழங்குவதாக மத்திய அரசு அடாவடி செய்து வருகிறது. தேசத்தில் கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகம் இருக்கிறதா? இல்லையா? எதற்காக பி எம் ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.
நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைத்து ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையை நிராகரித்து இருப்பதைச் சுட்டிக் காட்டியவர், நிதி வழங்காத காரணத்தால் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் பாதிப்பு மற்றும் 20 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு அவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்க நினைப்பதாகத் தெரிவித்தார்.
குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம் எனவும் தமிழக மீனவருக்கு ஒரு நியாயமா எனக் கேள்வி எழுப்பிய அவர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து மத்திய அரசு புறக்கணிப்பு செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு மீனவர்கள் கூட இறக்க மாட்டார் என்றும் ஒரு மீனவர்கள் கூட சிறை பிடிக்க மாட்டார், படகுகளும் வளைகளும் பறிக்கப்பட மாட்டாது என்று கூறிய மோடி அரசு தற்போது குஜராத் மீனவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசி வரும் மோடி அரசில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்களின் பாதுகாப்பு உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று என்றார்.
வெளிநாடு தொழில் முதலீட்டாளர்கள் பிரதமர் மோடியை நம்பி வருவதாகத் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, பாஜக ஆட்சி புரியும் மாநிலத்தில் தொழில் முதலீடுகளைக் கொண்டு வர வேண்டியது தானே எனக் கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது. அந்நிய செலவாணியை மீட்டெடுக்கும் இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகம் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வருவதன் காரணமாகத் தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் வருகை தருகிறார்கள். அதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம்; பிரதமர் மோடி அல்ல எனப் பதிலளித்தார்.