மே ஒன்று உழைப்பாளர் தினமான நேற்று தமிழகத்தில் பல இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் குடிமகன் ஒருவர் மதுவிலை உயர்வு குறித்து அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் காவாகுளம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கிராமத்தில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து பேசப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் மதுவிலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்பொழுது அங்கிருந்த சிலர் அவரை அமரவைக்க முயல, கட்டுப்படாத அந்த முதியவர், ''ஏங்க ஒரு குவாட்டர 200 க்கு விக்கிறாங்க... அத பாக்க மாட்டீங்களா?'' என ஆதங்கப்பட்டார். உடனடியாக அங்கிருந்த போலீசாரும், கட்சியினரும் அந்த முதியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.