நீலகிரியில் குடிபோதையில் ராஜநாகத்துடன் செல்பி எடுத்து சமூகவளைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வனபகுதிகளில் இருந்து வன விலங்குகள் வெளியேறி சாலையோரங்களில் சுற்றி வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது. செல்பி, போட்டோ எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கண்ணம்வயல் செல்லும் சாலையில் ஒரு மூங்கில் மரத்தில் ராஜநாகம் இருந்தது. கொடிய விஷத்தன்மை கொண்ட அந்த ராஜநாகத்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இளைஞர்கள் சிலர் பிடித்து துன்புறுத்தி செல்பி எடுத்து அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்தனர்.
இதுதொடர்பாக வனஅலுவலர்களுக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் நடந்த விசாரணையில், 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் குடிபோதையில் ஆபத்து தெரியாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.