மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இன்று மாயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தைச் சந்தித்தார். அமைச்சருக்கு தருமபுர ஆதினம் சார்பில் பூரண கும்ப மரியாதையும் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.
தருமபுர ஆதீனத்திடம் ஆசிபெற்ற அமைச்சர் சேகர் பாபு, பின்னர் ஸ்ரீ குருஞான சம்பந்தர் விருந்தினர் மாளிகையைத் திறந்து வைத்தார். இதையடுத்து, 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.
முன்னதாக திருக்கடையூர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்த அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூர் கோவில் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் எந்தவிதமான புகாரும் சர்ச்சையும் எழவில்லை. அதனால் அரசு தலையிடாது. ஆனால், தில்லை நடராஜர் கோவில் குறித்து பல புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றுதான் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம். திருக்கோவிலை அறநிலையத்துறை ஏற்றுக்கொள்ளும் என்று எங்கும் குறிப்பிடவில்லை. ஆதீனங்களின் பாரம்பரியத்தில் அரசு தலையிடாது” எனத் தெரிவித்தார்.
சிதம்பரம் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது எனத் தெரிவித்த சேகர் பாபு, சிறப்பாக நிர்வகிக்கும் கோவிலை கையிலெடுக்க முயற்சிக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.