விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் பணியில் ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
தனிப்படையினர், நேற்று அலமேலுபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஸ்கூட்டரில் சீட்டிற்கு அடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த காசிபழம் மகன் முருகேசன் என்பதும், இவர் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்து கடைகளுக்கு ஸ்கூட்டர் மூலம் தொடர்ந்து சப்ளை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் அவரது வீட்டை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அதில், அங்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். முருகேசனை தொடர் விசாரணை செய்ததில் அவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஓசூரை சேர்ந்த ஒருவரும் இந்த புகையிலை பொருட்களை மொத்தமாக விநியோகம் செய்து வரும் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில், தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு திருவண்ணாமலையைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு பயன்படுத்திய பொலிரோ காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ஓசூர் நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் அதில் சம்பந்தப்பட்ட இருவரை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.