தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (20-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தர்மபுரி வந்தார். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஆளுநருக்கு சங்கரய்யா யார் என்று தெரியுமா?ஆளுநரை நீக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், நாங்கள் ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
அரசு கொண்டு வரும் திட்டங்களை ஆதரித்து சட்டமாக்குவது ஆளுநரின் பணி. ஆனால், அவர் தனித்து செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கு என்ன மரியாதை?. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரமும், உரிமையும், நியமனம் செய்யப்பட்ட தனி ஒருவருக்கு எப்படி வந்தது?
அமெரிக்கா, இஸ்ரேலை ஆதரிப்பதால் இந்தியாவும் இஸ்ரேலை ஆதரிக்கிறது. பாலஸ்தீனம் தன் நிலப்பரப்பில் கொடுத்த நிலம் தான் இஸ்ரேல். அதில் இருந்துகொண்டு அவர்களின் நாட்டையே ஆக்கிரமிக்க முயற்சிப்பதால் தான் போர் உருவாகிறது. ஈழத்தில் என்ன நடந்ததோ அதே தான் பாலஸ்தீனத்திலும் நடக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டியில்லை, எங்களுக்கு நாங்கள் தான் போட்டி” என்று கூறினார்.