தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 12- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்டத் தேர்தலில் மாவட்டங்கள் வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 85.31%, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82.59%, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 82.52%, வேலூர் மாவட்டத்தில் 81.07%, திருப்பத்தூர் மாவட்டத்தில் 77.85%, செங்கல்பட்டு மாவட்டத்தில் 75.51%, தென்காசி மாவட்டத்தில் 73.35%, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72.33%, நெல்லை மாவட்டத்தில் 69.34% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்டங்களில் விடுபட்டப் பதவி இடங்களுக்கான தேர்தலில் 70.51% வாக்குகள் பதிவாகின. காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தண்டலம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி 173- ல் நாளை (11/10/2021) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள இரண்டாவது வார்டில் நாளை (11/10/2021) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது." இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.