கோவை மாவட்டம் தெற்கு தாலுகா பகுதிக்குட்பட்ட கோட்டைமேடு அருகே உள்ளது கரிவரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலுக்குச் சொந்தமான வணிகக் கட்டிடம் ஒன்று கோட்டை பெருமாள் கோவில் வீதியில் இருந்து வருகிறது. இந்த வணிகக் கட்டிடத்தை பாலசுப்ரமணியம் என்பவருடைய பெயரில் குத்தகைக்கு எடுக்கப்பட்டு மூன்றாம் நபர் பயன்படுத்தி வந்தது அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கட்டிடத்துக்கான வாடகை தொகை உள்ளிட்ட குத்தகை பணமும், கடந்த 20 ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கு, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தை கையகப்படுத்தி, சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில் கோவில் செயல் அலுவலர் சரவணக்குமார், தக்கார் செல்வம் பெரியசாமி, அறநிலையத்துறை பணியாளர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து வணிகக் கட்டிடத்தை கோவில் வசம் கொண்டு வந்தனர்.
இது குறித்து செயல் அலுவலர் சரவணக்குமார் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவின்படி, கோவிலுக்குச் சொந்தமான வணிகக் கட்டிடம், கையகப்படுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 5 கோடியே 10 லட்சம் ரூபாய்'' என செயல் அலுவலர் சரவணக்குமார் தெரிவித்தார்.