சென்னையில் அனுமதியின்றி மது விருந்து நடந்த மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருமங்கலத்தை அடுத்த விஆர் மாலில் மதுவுடன் கூடிய ஆடல், பாடல் நிகழ்ச்சி நேற்று இரவு நடத்தப்பட்டது. முறையாக அனுமதி வாங்காமல் மது விருந்து நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். சில ஆயிரம் கட்டணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னையின் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்தது.
அனுமதி பெறாததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். அத்துடன், அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் விலை உயர்ந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் அங்கு உயிரிழந்ததை அடுத்து காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே மதுக்கூடத்தில் விருந்து நடத்தியதாக மேலாளர் நிகாஷ் போஜராஜ், பாரதி, பார் ஊழியர் எட்வின் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சர்ச்சைக்குரிய மதுபான கூடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.