ஓமலூர் அருகே, அனுமதியின்றி இயங்கி வந்த 10 சாயப் பட்டறைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக மூடி 'சீல்' வைத்தனர். நீர்நிலைகள், சாக்கடை கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறாமல் சாயப் பட்டறைகள் இயங்குவதும், அந்தப் பட்டறைகள் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஓமலூர், காடையாம்பட்டி, குண்டுக்கல், செம்மாண்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் குண்டுக்கல், செம்மாண்டப்பட்டியில் அனுமதியின்றி 10 சாயப் பட்டறைகள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்தப் பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததும் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அந்த சாயப் பட்டறைகளை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இந்தப் பட்டறைகளின் மின் இணைப்பைத் துண்டிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாசுக் கட்டுப்பாட்டுத்துறையின் அதிரடி நடவடிக்கையால் விதிகளை மீறிச் செயல்படும் சாயப் பட்டறை உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.