சாரண - சாரணியர்(NSS) அமைப்பிற்கு எச்.ராஜாவை தலைவராக்க முயற்சிப்பதா? எஸ்.டி.பி.ஐ கண்டனம்
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி இன்று வெளியிடும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சாரண - சாரணியர்(NSS) அமைப்பின் தலைவர் பதவியை தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவிற்குத் தாரை வார்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாரண-சாரணியர் அமைப்பின் முக்கியக் குறிக்கோள் என்பது நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை முதலான பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவதாகும். சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்ற சாரண - சாரணியர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், பிறரைச் சகோதரர்களாக நேசிக்கும் பண்புடையவர்களாகவும், இயற்கையை நேசிக்கிறவர்களாகவும், விலங்குகளிடத்தே அன்பு காட்டுபவர்களாகவும், பொதுவுடமைகளைப் பாதுகாப்பவராகவும், செயல்களில் தூய்மை உடையவர்களாகவும் உருவாக்கும் இவ்வியக்கத்திற்கு தற்போது தமிழின விரோத போக்கையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குலக்கல்வி முறையை வரவேற்கும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளரான எச்.ராஜாவை சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவராக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என்ற செய்தி தமிழக மக்கள் ஒரு போதும் எற்றுக்கொள்ள மாட்டார்கள்
தற்போது சாரணர் இயக்கத்தின் பாதுகாவலராக கவர்னரும், இணை காவலராக கல்வி அமைச்சரும் இருக்கும் நிலையில், தலைவர் பதவியை பா.ஜ.,வுக்கு கொடுத்து பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்க ஆளும் அதிமுக அரசுக்கு என்ன நேர்ந்தது?
இத்திரைமறைவு முயற்சிக்கு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இத்தோடு எச்.ராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய சதி நடந்த நிலையில் ராஜாவிற்கு போட்டியாக களம் இறங்கிய முன்னாள் பள்ளி கல்வி இயக்குனர் மணியை ராஜாவுக்கு ஆதரவாக வாக்களிக்க மிரட்டப்படுகிறார் என்ற செய்தியும் ஜனநாயக மாண்புகளுக்கு பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.இச்செயல் மிகவும் வன்மையாக கண்டிக்க தக்கதாகும்.
எனவே சாரண - சாரணியர் அமைப்பிற்கு மனித ஒற்றுமைக்கு நேர் எதிரான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் பிரிவான பா.ஜ.க.வை சேர்ந்த நபரை தலைவராக்க முயற்சிப்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிப்பதோடு மதசார்பற்ற நாட்டின் ஒற்றுமையை நிலை நிறுத்த தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் மதங்கள் மூலம் அரசியல் செய்யும் கட்சிகளை துடைத்தெரிந்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.