பள்ளி அருகில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அமைக்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1989-ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் செயிண்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தற்போது, அந்தப் பள்ளியின் அருகில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் விற்பனை நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகம், மருத்துவமனைகள் அருகில் பெட்ரோல் பங்குகள் அமைக்கக் கூடாது என விதிகள் உள்ளதை மீறி அமைக்கப்படுவதாகவும், இதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுவதுடன், பள்ளிக் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள், உடல் நலக் குறைவு ஏற்படும் என மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி செயிண்ட் மேரீஸ் பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளது. பள்ளியின் அருகில் பெட்ரோல் பங்க் அமைக்கத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு குறித்து மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிர்வாகம் ஆகியோர் விளக்கமளிப்பதற்காக பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.