புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான 2 ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 90% ஆசிரியர்கள் கலந்தாய்வை புறக்கணித்துள்ளனர்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான 2 ம் கட்ட கலந்தாய்வு நேற்று அறந்தாங்கியில் நடந்தது. 74 ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தனர். இந்த கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டிருந்தது. இதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்று 6 ஆசிரியர்கள் தங்களுக்கு வேண்டிய பள்ளிகளை தேர்வு செய்து பணியிட மாறுதல் ஆணை பெற்றனர். மேலும் கலந்தாய்வில் கலந்து கொண்ட 3 ஆசிரியர்கள் பணியிட மாறுதலே வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றனர். ஆனால் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த 65 ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல் கலந்தாய்வை புறக்கணித்துள்ளனர்.
மேலும், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் பேரூராட்சி காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 3 இடைநிலை ஆசிரியர்கள், 3 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருந்தும் கூட 2 வது கலந்தாயவிலும் எந்த ஆசிரியரும் அங்கு பணியாற்ற முன்வராததால் அந்தப் பள்ளியில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.
அதேபோல அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவரின் சொந்த ஊரான ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அனைத்து ஆசிரியர்களும் பணி மாறுதலில் சென்ற நிலையில் நடந்து முடிந்த 2 வது கலந்தாய்விலும் இந்த பள்ளிக்கும் ஆசிரியர்கள் வரவில்லை என்பதால் இந்த இரு பள்ளிகளிலும் மாற்றுப்பணி ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை வைத்தே பள்ளி செயல்பட்டு வருகிறது.